ராஜினாமா செய்ய விரும்பும் டி.கே.ராஜேந்திரன்? : தடுக்கும் முதல்வர்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:23 IST)
குட்கா விவகாரம் தீவிரமானதை அடுத்து டிஜிபி ராஜேந்தின் ராஜினாமா செய்ய விரும்புவதாகவும், அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடுத்து வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது.  
 
நேற்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் 7 சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரமாக சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனையின் முடிவில், 2 பைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்னும் கருத்து எதுவும் சொல்லவில்லை. இன்று காலை அவரின் வீட்டில் சோதனை முடிவிற்கு வந்தது. 
 
எனவே, டிஜிபி ராஜேந்திரன், சுகாதரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கான நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.

 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிகிறது. அவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் எனத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்களை டெல்லி அழைத்து செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், இந்த ரெய்டால் டிஜிபி ராஜேந்திரன் அப்செட் ஆகியுள்ளாராம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அவர் ‘ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் எனக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை. இப்போது என் வீட்டில் சிபிஐ ரெய்டும் நடந்துள்ளது. இனிமேல் என்னால் அலுவலகம் செல்ல முடியாது. எனவே, என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறினாராம்.
 
ஆனால், இதை பழனிச்சாமி ஏற்கவில்லை எனத் தெரிகிறது. அதாவது, அவர் ராஜினாமா செய்தால் அடுத்து அமைச்சர் விஜய்பாஸ்கரும் ராஜினாமா செய்ய வேண்டி வரும். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில் விசாரணையை சந்திக்க நேரிடும். ஒருவர் பின் ஒருவராக சிக்கி அரசுக்கு சிக்கல் ஏற்படும் என கருதும் முதல்வர், ராஜேந்திரனிடம் நீங்கள் ராஜினாமா செய்யக்கூடாது எனக் கூறிவிட்டார் என செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்