மன்சூர் அலிகானுக்காக மன்னிப்பு கேட்ட சிம்பு....

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (12:32 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர் சிம்பு இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசாரையும் தாக்கினர். அப்போது, பாராதிராஜா, சீமான் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு, அதன் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
 
ஆனால், அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் இன்னும் விடுவிக்கப்படவில்லை. போலீசாரை தரக்குறைவாக விமர்சித்ததால் அவரோடு, சிலரை சிறையில் அடைத்துவிட்டனர்.

 
இந்நிலையில், அதுபற்றி விசாரிப்பதற்காக நடிகர் சிம்பு இன்று சென்ன கமிஷனர் அலுவலகம் வந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
 
அந்த போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. தங்களின் கடமையை செய்ய போலீசார் அங்கு குவிந்திருந்தனர். அதுபோல, தன் கடமையை செய்ய வந்த ஒருவர், தன்னை தாக்கியதை புரிந்து கொண்டு அந்த அதிகாரி அவரை திருப்பித் தாக்கவில்லை. அதை நான் மதிக்கிறேன். மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் உயிரோடு இருக்கிறாரா எனது கூட தெரியவில்லை என அவரின் மகன் என்னிடம் கூறியதால், அதுபற்றி விசாரிக்க வந்தேன். அவரை கைது செய்தது சரியெனில், அவரைப் போல பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என சிம்பு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்