நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால், அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பேட்டி அளித்த சீமான், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய அநாகரீக பேச்சை அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருடைய வீட்டை சுற்றி மூன்று இடங்களில் தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருவதாகவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து, அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை என்றும், உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அம்மா, சகோதரி, மகள் என யாரிடம் வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெரியார் கூறியதாகவும், சீமான் நேற்றைய பேட்டியில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு அனைத்து தரப்பு அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.