48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

Prasanth Karthick

திங்கள், 6 ஜனவரி 2025 (13:02 IST)

சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்த செயல்களுக்கு பபாசி கண்டனம் தெரிவித்துள்ளது.


 


 

சென்னையில் 48வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வருகிறது. புத்தக கண்காட்சி வளாகத்தில் உள்ள நிகழ்ச்சி மேடையில் தினமும் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்து வருகிறது. அவ்வாறாக கடந்த சனிக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட தமிழ் தேசியம் புத்தகத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சீமான் கலந்து கொண்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், புதுச்சேரி பாடலை ஒலிக்க செய்ததும், திமுக ஆட்சியாளர்களை சீமான் ஒருமையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், தனக்கு சீமானின் செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை என்றும், புத்தக எழுத்தாளர் விருப்பத்தின்படியே சீமான் அழைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக புத்தக பதிப்பாளர்கள் அமைப்பான பபாசி தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து பேசியுள்ள பபாசி தலைவர் சொக்கலிங்கம் “சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே இது இலக்கிய மேடை, அரசியல் மேடையல்ல, புத்தகம் தொடர்பாக மட்டும் பேசவேண்டும் என அறிவுறுத்தினேன். மேலும் பதிப்பகத்தார் அழைத்து வரும் நபர் அரசியல் பேசக் கூடாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

48 வருடத்தில் நடக்காத ஒன்று இப்போது நடந்துள்ளது. சீமான் தன்னுடைய கண்ணியத்தை காக்க தவறிவிட்டார்” என பேசியுள்ளார்.

 

மேலும் பபாசி பொதுச்செயலாளர் முருகன், நடந்த சம்பவங்களுக்காக சீமானும், புத்தக வெளியீட்டு நிறுவனமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்