ஆர்.கே.நகர் இறுதிப்பட்டியல் வெளியீடு - விஷாலுக்கு வாய்ப்பு இல்லை

வியாழன், 7 டிசம்பர் 2017 (15:47 IST)
பல அதிரடி திருப்பங்களுக்கு பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் இறுதிப்பட்டியல் வெளியானது.


 
விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.   
 
அந்நிலையில், விஷாலை முன் மொழிந்து பின் மறுத்த 2 நபர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தால் விஷாலின் மனு மறுபரீசிலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
மனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கெடு. எனவே, அதற்குள் அவர்கள் இருவரையும் விஷால் தரப்பு தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல், இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுக்கு மீண்டும் தேர்தல் அதிகாரி வாய்ப்பளித்ததால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.
 
ஆனால், விஷாலுக்காக கையெழுத்திட்ட இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என விஷால் கூறினார். மேலும், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை அவர் நேரில் சந்தித்து முறையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் ‘நீங்கள் மிரட்டியதால்தான் உங்கள் மனுவை ஏற்றுக்கொண்டேம்’ என வேலுச்சாமி என்னிடம் கூறினார். இதை நான் சும்மா விட மாட்டேன் எனக் கோபமாக கூறினார்.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தற்போது வெளியாகிவிட்டது. மொத்தம் 145 பேர் மனு அளித்திருந்தனர். அதில், 73 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், 72 பேர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், 14 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனால் இறுதியாக மொத்தம் 58 பேர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்