கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென விலை உயர்ந்து வரும் தங்கம் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்திருப்பதாலும், ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு நிகரான டாலர் விலை கூடிக் கொண்டே வருவதாலும் இந்தியாவில் தங்கம் விலை எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஆயிரக்கணக்கில் எகிறி வருகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக சவரன் ரூ.92,640 ஆக விற்பனையாகி வந்த நிலையில் அடுத்த நாளே ரூ.94,600 ஆக விலை உயர்ந்தது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.94,880 ஆக விற்பனையானது. இன்றாவது தங்கம் விலை கொஞ்சமாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது.
இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ள 22 காரட் ஆபரண தங்கம் ரூ.95,200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.11,900 ஆக விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.1,03,848 க்கும், ஒரு கிராம் ரூ.12,981க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை சற்று ஆறுதலாக கிராமுக்கு ரூ.1 குறைந்து மீண்டும் ரூ.206ஐ தொட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2.06 லட்சமாக விற்பனையாகி வருகிறது.