பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார். வழிநெடுகிலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர், ஜனவரி 20ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார். 2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.
ஜனவரி 21ஆம் தேதி காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் வருகை ஓட்டி தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளார் நந்தகுமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை, விமான நிலையம், அடையாறு கடற்படை தளம், ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்களில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.