கடந்த 2014ல் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட ஆண்டுகள் கழித்து பாஜக ஆட்சி அமைந்தது. அதை தொடர்ந்து 2019ம் ஆண்டிலும் பாஜக பெருவாரியான வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜகவின் வெற்றி பெரிதும் எதிர்நோக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கான நிதியை குறைக்க முயற்சித்ததாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014ல் பிரதமரான நரேந்திர மோடி அதன்பின்னர் மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க மறைமுகமாக பல முயற்சிகளை செய்ததாகவும், அனைத்து மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை முடிந்த அளவு குறைக்க அவர் நிதிக்குழுவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால் நிதிக்குழு அதற்கு சாத்தியமில்லை என்று மறுத்ததாகவும் அவர் சொன்னதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி நிலுவை தொகை, பேரிடர் காலங்களில் உரிய நிவாரண நிதி வழங்காதது என மத்திய அரசு மேல் மாநில அரசுகள் பல குறைகளை கூறி வரும் நிலையில் இந்த புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக வட்டாரத்தினர் இது பிரதமரின் பெயருக்கு களங்கம் விளைவிக்க போலியாக சிலரால் பரப்பப்படும் தகவல் என்று கூறியுள்ளனர்.