கர்ப்பிணி பெண் பலி.! வேலை செய்யாத அபாய சங்கிலி.! ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.!!

Senthil Velan
வெள்ளி, 3 மே 2024 (11:24 IST)
சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
தென்காசி அருகே உள்ள மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் வரை கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்தார். ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கர்ப்பிணியான கஸ்தூரிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாயச் சங்கிலியை இழுக்க முயன்றபோது அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், S8. S9 ஆகிய இரண்டு பெட்டிகளில் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்று உறவினர்கள் கூறியுள்ள நிலையில் ரயில் கொல்லம் சென்றடைந்ததும் ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலி வேலை செய்கிறதா என்பது பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரைத்து விருத்தாச்சலம் கோட்டாட்சியருக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்