சனாதானத்தை ஒழிப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திராவிடர் கழகம் முன்னெடுத்த சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் அவர் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உதயநிதி தான் பேசியவற்றை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளது மேலும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சில அமைப்புகள் முயல வாய்ப்புள்ளதால் இந்த கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.