கண்டெய்னரில் குட்கா; போலீஸை கொல்ல முயற்சி! – சினிமா பாணியில் நடந்த சேஸிங்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:06 IST)
சூலூர் அருகே கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்களை போலீஸார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்கள் வழியாக முறைகேடாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸார் அவற்றை அவ்வபோது பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே முறைகேடாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தென்னம்பாளையம் பகுதி அருகே போலீஸார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வந்த கண்டெய்னர் லாரியை இன்ஸ்பெக்டர் மாதையன் தடுத்து நிறுத்த முயன்றபோது அது அவரை மோத வந்துள்ளது. நொடி பொழுதில் தாவி உயிர்தப்பினார் மாதையன்.

இதையடுத்து உடனே கண்டெய்னர் லாரியை போலீஸார் துரத்தி சென்றுள்ளனர். சுமார் 2 கி.மீ தூரத்திற்கு தொடர்ந்த இந்த சேஸிங்கில் கண்டெய்னரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அதில் டிரைவர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் டிரைவரை கைது செய்துள்ளனர். கண்டெய்னருக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய அதன் உரிமையாளருக்கு தகவல் அனுப்பிய போலீஸார் கண்டெய்னருக்கு சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்