இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்தும், சிந்து நதிநீர் பகிர்வு குறித்து ஐ.நா சபையில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்திய பிரதிநிதி கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியது. அதற்கு முன்னதாக இரு நாடுகள் இடையே நிலவிய மோதல் போக்கு காரணமாக இந்தியா, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தற்போது இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.நா சபையில் இரு நாடுகள் இடையேயான விவாதம் நடந்தது.
அதில் பாகிஸ்தானுக்கான ஐ.நா தூதர், இந்தியா தண்ணீரை நிறுத்தி பாகிஸ்தான் உடனான ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும், தண்ணீர் உயிர் வாழ்வதற்கானது, போருக்கானது அல்ல என்றும் பேசினார்.
அப்போது ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய தூதரான பர்வதனேனி ஹரிஷ் பேசினார். அதில் அவர் “இந்தியா எப்போதும் அண்டை நாடுகளை மரியாதையோடே நடத்தி வந்துள்ளது. சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு முதலில் முன் வந்ததே இந்தியாதான். இதுவே இந்தியாவின் சக நாடுகளுடனான சகோதரத்துவத்தை காட்டுகிறது.
ஆனால் கடந்த 65 ஆண்டுகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அமைதி ஒப்பந்தங்களை மீறி மூன்று முறை இந்தியா மீது போர் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயிரம் முறை இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். கடந்த 4 தசாப்தங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலால் இந்தியாவில் குறைந்தது 20 ஆயிரம் பேர் பலியாகியிருப்பார்கள். இத்தனை ஆண்டுகளில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சில பயங்கரவாத தாக்குதல்களில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவாக இருந்ததை இந்தியா ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருவதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K