தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அவர் வகித்து வந்த துறைகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நீடித்து வருகிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் இருந்தே தமிழக அரசியலில் ஒரு அசாதரன சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஆனால் இறுதியாக அந்த சூழல் எல்லாம் மாறி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது, ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக நீடித்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அமித் ஷாவிடம் தமிழகத்தில் நாம் நினைத்திருந்தால் அரசியல் செய்திருக்க முடியும் என கூறியதாக பாஜக நிர்வாகி ஒருவர் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றிடம் விவரித்திருக்கிறார்.
இது குறித்து அந்த பாஜக நிர்வாகி கூறியது, சில நாட்களுக்கு முன்பு அமித் ஷாவிடம் பேசிய பிரதமர் மோடி, நாம் நினைத்திருந்தால் ஜெயலலிதா முதல்வர் அல்ல என்பதை அறிவித்திருக்கலாம். அவர் மக்கள் செல்வாக்குமிகுந்த பெண்மணியாக இருக்கிறார். அவரை நாம் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.
ஆனால் கட்சியின் மூத்த தலைவர் அவசரப்பட்டு டுவிட்டரில் தகவல் வெளியிட்டது எதிர்மறையாக மாறிவிட்டது. எனவேதான் ஆட்சிக்கலைப்பு என்பதெல்லாம் இல்லை என்று தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் பேச சொன்னேன். ஜெயலலிதா குணமாகி வந்தாலும், நமக்கு உதவியாக இருப்பார். அதுவரையில் நடக்கின்ற அனைத்தையும் கவனிப்போம்.
அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. காங்கிரஸ்காரர்கள்தான், கட்சி உடையுமா எனக் காத்திருப்பார்கள். ஜெயலலிதா முதல்வராக தொடர என்னுடைய ஆதரவு தேவை என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரியும். இப்போது வரையில் ஜெயலலிதா உடல்நிலை சஸ்பென்சாகவே இருக்கிறது. அப்படியே அவர் குணமாகி வந்தாலும் ஆக்டிவாக செயல்பட முடியாது.
ஜெயலலிதா முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நம்முடைய ஆதரவு அவருக்குத் தேவை. நாம் அவருக்குச் செய்த உதவியை மறக்க மாட்டார். சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், அதிமுகவில் நம்முடைய எதிரி யார்? நண்பர் யார் என்பதையே அறிந்து கொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.