சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் 5200க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இதர போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று விடிய விடிய இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், 5200க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் மட்டுமின்றி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பிற போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகாரை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.