ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

Prasanth K

ஞாயிறு, 27 ஜூலை 2025 (14:13 IST)

இன்று ‘மன் கீ பாத் (மனதின் குரல்)’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தஞ்சையை சேர்ந்த மணிமாறன் என்பவரை வாழ்த்தி புகழ்ந்து பேசியுள்ளார்.

 

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். தற்போது ஆடித்திருவாதிரை திருவிழாவிற்காக தமிழகம் வந்துள்ள நரேந்திர மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியிலும் தமிழகத்தை பெருமளவில் பாராடியுள்ளார்.

 

அதில் அவர் “விண்வெளி பயணத்தை முடித்து சுபன்ஷூ சுக்லா திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்தியா முழுவதும் குழந்தைகளிடமும் விண்வெளி ஆர்வம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் 50க்கும் குறைவான விண்வெளி தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அது 200க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆகஸ்டு 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.

 

நாம் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். சுயசார்பு மூலமாக வல்லரசு நாடாக இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் இளைஞர்கள் சுயசார்பு விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது, நாட்டின் சுயசார்பு நோக்கம் எவ்வளவு பலம் பெறும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

 

தஞ்சையை சேர்ந்த மணிமாறன் ஓலைச்சுவடியை படிக்கும் முறையை இளைஞர்கள், சிறுவர்களுக்கும் கற்பித்து வருகிறார். நமது ஓலைச்சுவடிகளில் நம்முடைய வரலாறு, விஞ்ஞானம் என அனைத்தும் உள்ளன. அவற்றை நாம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ஓலைச்சுவடி எழுத்துகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் செங்கோட்டை உள்ளிட்ட புராதான சின்னங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்