விழுப்புரம், திண்டிவனம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினம்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரம் பேசஞ்சர் மின்சார ரயில்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக விழுப்புரம் பகுதிகளில் இருந்து மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் விழுப்புரம் பேசஞ்சர் ரயில் சென்னை நோக்கி சென்ற பொழுது மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, 50க்கும் மேற்பட்ட பயணிகள் தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் பயணிகளிடம் கேட்டபோது, தினந்தோறும் சென்னை வரை செல்லும் மின்சார ரயில் காலதாமதமாக இயக்கப்பட்டு வருவதால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை எனவும், தினமும் 6:30 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.00, 7.30 மணி வரை தாமதமாகவே வருவதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர்.