அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடும் நோக்கத்தில், தி.மு.க. அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்துவிட்டதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ. 888 கோடி மோசடி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கியதன் மூலம் ரூ. 888 கோடி மோசடி நடந்துள்ளதாக வெளியான தகவல், தி.மு.க. ஆட்சியில் ஊழல் ஆழமாக வேரூன்றிவிட்டதை காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் சாடினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 2,538 காலி பணியிடங்களுக்கு 1.12 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், ஒரு காலி பணியிடத்திற்கு ரூ. 35 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, தகுதியற்றவர்களை பணியமர்த்தியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான திறமையான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை 'திராவிட மாடல்' அரசு பறித்துவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கைகளாலேயே வழங்கப்பட்ட பணி நியமனங்களிலேயே இத்தகைய முறைகேடு நடந்திருந்தால், கடந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மோசடிகள் நடந்திருக்கும் என்பதை நினைத்தால் திகில் ஏற்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழக கஜானாவை தி.மு.க. அரசு காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான இளைஞர்களின் எதிர்காலத்தையும் சூனியமாக்கி வருகிறது. அறிவாலயம் அரசின் இந்த ஊழல் மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தமிழக பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.