விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட்ட பச்சமுத்து

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (21:00 IST)
பச்சமுத்து சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
 

 
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தருவதாக, வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் மோசடி செய்து விட்டதாக காவல் துறையில் பலர் புகார் செய்தனர்.
 
இந்த மோசடி குறித்து பதிவான வழக்கில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர், பச்சமுத்துவை காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் சென்னை முதன்மை மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
மேலும், பச்சமுத்து சைதாப்பேட்டை 11 வது நீதிமன்றத்தில் ரூ.75 கோடி செலுத்த வேண்டும் என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை, தினமும் காலையில் 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்றும், அவரின் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
 
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த பச்சமுத்து, ஞாயிறன்று சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அடுத்த கட்டுரையில்