செயல் தலைவராகும் ஓபிஎஸ்: எடப்பாடியுடன் ஒரே மேடையில் இணைப்பு விழா!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (09:29 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா அணியானது எடப்பாடி அணியாக மாறி அதிலிருந்து தினகரன் அணி புதிதாக உருவாகியது.


 
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை தங்களுடன் இணைக்க எடப்பாடி அணி தீவிரமாக முயற்சி செய்து வந்தது. ஆனால் மறைமுகமாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு கிடைக்காததால் இரு அணியும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
 
இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் கட்சியில் தங்களுக்கு உள்ள பொறுப்புகளும் பேசி முடித்துவிட்டனராம். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிக்கவும், ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை வகிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
 
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்ஸுக்கு வழங்க சட்ட சிக்கல் இருப்பதால் இப்போதைக்கு செயல் தலைவர் பதவியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பிக்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்க பாஜக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் தனித்தனியாக கொண்டாடி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் விரைவில் ஒன்றிணைய உள்ளதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் ஒரே மேடையில் ஏறப்போவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்