மீண்டும் தர்மயுத்தம் ஆரம்பம்? – ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் ஓபிஎஸ்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (12:13 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் புறப்படுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுசெயலாளருமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு புறப்படுகிறார்.

முன்னதாக தனது முதல்வர் பதவியிலிருந்து விலகும் முன் ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று அவர் தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்வதால் அடுத்த தர்ம யுத்தம் தொடங்குகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டத்தில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்