விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை குறைக்க கோரிக்கை! – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (10:56 IST)
விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது பல இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற வழிபாட்டு தலங்களுக்கு அருகிலேயும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது குறித்து எந்த வழிகாட்டு முறைகளும் இல்லையென்றும், விநாயகர் சதுர்த்திக்கு இந்து அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் இந்து அமைப்புகளையும் இணைத்து புதிய மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, தற்போதைய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்