அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓபிஎஸ்: இரு அணிகளும் சற்று நேரத்தில் இணைகிறது!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (14:40 IST)
அதிமுக இரு அணிகளும் இன்று இணையும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார்.


 
 
6 மாத இடைவெளிக்கு பின் அதிமுகவின் எடப்பாடி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி ஆகிய இரண்டும் இன்று இணைய இருப்பதாக நேற்று மாலையிலிருந்தே செய்திகள் வெளியானது. அதற்கான ஏற்பாடுகளும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.
 
இன்று காலை ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் எனவும், அங்கு எடப்பாடி பழனிச்சாமியும், அவரும் செய்தியாளர்களை சந்தித்து அணிகள் இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. இதனால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கி உத்தரவிட்ட பின்புதான் நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி நிபந்தனை விதித்ததால் இரு அணிகளும் இன்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பிடம் எடப்பாடி தரப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பினரிடமும் ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தற்போது அணிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் தற்போது தனது இல்லத்தில் இருந்து அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஓபிஎஸ் தலைமை கழகம் வந்ததும் இரு அணியினரும் ஒன்றாக சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சரவையிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்