சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை அருகே, பிறந்த 9 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று ரூ. 1.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது மனைவி சிவகாமிக்கு, இரண்டாவது பெண் குழந்தை சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு இந்த குழந்தை விற்பனை குறித்த ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
குழந்தையின் பெற்றோர் வீட்டை சோதனையிட்டபோது, அது பூட்டப்பட்டிருந்தது. விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, அந்த குழந்தையை அதன் பெற்றோர், தேவராஜ் என்ற நபர் மூலம் ரஞ்சித் என்பவருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் பெற்றோரான சந்தோஷ் - சிவகாமி, விற்பனைக்கு உடந்தையாக இருந்த தேவராஜ் மற்றும் குழந்தையை வாங்கிய ரஞ்சித் ஆகிய நான்கு பேர் மீதும் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், குழந்தையை மீட்கவும், குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.