சேலம், மேட்டூர் அணை பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் உட்பட எட்டு பேரை நாய்கள் விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நாய்க்கடியால் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதை தடுக்க, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். தற்போது ஒரு சிறுவன் உட்பட எட்டு பேரை நாய் கடித்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
"நாய்களா, மனிதர்களா?" என்று பார்த்தால், மனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம், மனிதர்களின் பாதுகாப்பிற்கும், விலங்குகளின் நலனிற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.