புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

Senthil Velan
செவ்வாய், 28 மே 2024 (15:01 IST)
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைக் கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது  என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது என்றும் தென் தமிழகத்தை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
 
விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியை கேரளாவிடம் தமிழகம் இழந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயல்வது இந்திய ஒருமைப்பாட்டை கேலிக் கூத்தாக்கும் செயலாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக, தமிழக உரிமை பறிபோவதை வேடிக்கைப் பார்ப்பதும், திராவிடம், திராவிடம் என்று கூறிக்கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிடம் பறிபோகும் தமிழக உரிமையைப் பெற முடியாமல் மாறி மாறி மண்டியிட்டு அடிபணிவதும் வெட்கக்கேடானதாகும் என்று அவர் விமர்சித்துள்ளார்.

ALSO READ: எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!
 
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தைத் துவங்க வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது என்றும் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்