அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய உள்ளதையொட்டி தினகரன் அணியினர் கடும் கோபத்தில் உள்ளனர். தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக அறிவித்ததையடுத்து இரு அணிகள் இணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரையில் தினகரன் அணியினர் மாபெரும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு கூடிய கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் என விமர்சிக்கப்படுகிறது. இதயே தான் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறினார்.
இதனையடுத்து தற்போது அதிமுகவில் நிகழும் பரபரப்பான சூழல் குறித்து தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் எடப்பாடி அணியை கடுமையாக சாடியுள்ளார்.
தலைக்கு 500 ரூபாய் கொடுத்தவர்களெல்லாம் தலைவராக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நிலவைத் தொடுவதற்கு எழுகின்ற அலைகளைப் போல இளைஞர்கள் மேலூர் பொதுக்கூட்டத்துக்கு வந்தார்கள்.
ஆனால் இவர்கள் அரசு விழா என நடத்துகிற கூட்டத்தில் பொறிகடலை தின்ன முடியாத பொக்கவாய்க் கிழவிகளைக் கொண்டு வந்து உட்கார வைத்துக்கொண்டு கதையளந்து கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி அணியை கடுமையாக விளாசினார்.