ஓ.பி.எஸ் அணியில் இடம் பெற்றிருப்பவர்களு பதவி ஒதுக்கப்படுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் இழுபறி நீடிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார்.
மேலும், தினகரனை துணை பொதுச்செயாலாளராக நியமித்தது செல்லாது என ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறையை எடப்பாடி அணி நிறைவேற்றிவிட்டதால், எந்த நேரமும் இரு அணிகளும் இணையும் என நேற்றே எதிர்பார்க்கப்பட்டது. மேலும், நேற்று இரவு 7.30 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இரு அணிகளும் அங்கு இணையும் எனவும், அதன் பின் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகிய இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகிறார்கள் எனவும் செய்திகள் பரவியது.
ஆனால், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மூன்று மணி நேர ஆலோசனைக்கு பின்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதாவது, ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் மற்றும் பொருளாளர் பதவியும், அவரது அணியில் உள்ள இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்படும் என எடப்பாடி தரப்பிலிருந்து உத்தரவாதம் அளித்ததாக தெரிகிறது. இதை ஓ.பி.எஸ் ஏற்றுக்கொண்டு, இரு அணிகளின் இணைப்பிற்கு சம்மதிக்கும் முடிவிற்கு வந்துள்ளார். இதையே தனது ஆதரவாளர்களிடமும் கூறியுள்ளார்.
ஆனால், அமைச்சர் பதவி தனக்கு வழங்கு வேண்டுமென முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் போர்க்கொடி தூக்க பிரச்சனை தொடங்கியுள்ளது. அதேபோல், கே.பி.முனுசாமி, மதுசூதனன், பொன்னையன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகிய அனைவரும் தங்களுக்கும், நம்மை வந்த மற்ற நிர்வாகிகளுக்கும் எடப்பாடி அணி பதவிகள் ஒதுக்கிய பின்பே அணிகள் இணைவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது.
அதாவது, தற்போதைக்கு கொடுக்கின்ற பதவியை பெற்றுக்கொண்டு எடப்பாடி அணியுடன் இணைந்து மற்றவர்களுக்கான பதவியை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ளாலாம் என ஒரு அணியும், அனைவருக்குமான பதவிகளையும் பெற்றுக்கொண்டு அதன் பின் இணைவதே சரியாக இருக்கும் என கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரும் கூறியிருக்கிறார்கள். எனவே அணிகள் இணைப்பு நேற்று நடைபெறவில்லை.
அதனால்தான், ஓ.பி.எஸ் வருவார் எனக் காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று இரவு ஏமாற்றமே மிஞ்சியது. இது தொடர்பாக, எடப்பாடி அணியினருடன், ஓ.பி.எஸ் அணி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனத் தெரிகிறது.
ஓ.பி.எஸ் அணியில் உள்ள அனைவருக்குமான பதவிகள் ஒதுக்கப்பட்டு, திருப்தியளிக்கப்பட்ட பின்னரே இரு அணிகளின் இணைப்பு சாத்தியமாகும் எனத் தெரிகிறது.