டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 22 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை சந்திக்க மக்களவை துணை சபாநாயகர் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை இரண்டாவது முறையாக இன்று வந்தார்.
பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தொடர்ந்து 22 நாட்களாக டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள தமிழக விவசாயிகளை சந்திக்க இன்று இரண்டாவது முறையாக வந்தார் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை.
இவரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் விவசாயிகளை சந்திக்க வரவில்லை என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பிதுரை நான் மக்களவை துணை சபாநாயகர், எனது பதவி என்ன குறைச்சலான பதவியா? முதல்வருக்கு இணையான பதவி என்னுடையது என்று காட்டமாக கூறினார்.
பின்னர் சுதாரித்த தம்பிதுரை, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் வைக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்னை அனுப்பி வைத்தார் என கூறினார்.