ஆளுனரை தாக்கி யாரும் எதுவும் பேசாதீங்க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (15:28 IST)
நேற்றைய சட்டமன்ற விவகாரத்திற்கு பிறகு ஆளுனர் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு ஆளுனரை விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் உரையை முழுமையாக வாசிக்காதது குறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல ஆளுனரை திமுகவினர் அவமானப்படுத்திவிட்டதாக அதிமுக, பாஜக கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று குடிமைப்பணி தேர்வர்களுடன் கலந்துரையாடலில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி “மத்திய அரசா? மாநில அரசா? என்ற கேள்வி வந்தால் நீங்கள் எப்போதும் மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும். நிர்வாக ரீதியாக ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டை தவிர வேறுயாரும் இதுபோல பிரச்சினை செய்தது இல்லை” என கூறியுள்ளார்.

ஆளுனரை கண்டித்து ஆங்காங்கே சிலர் சுவரொட்டிகளையும் ஒட்டி வந்தனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனருக்கு எதிராக போஸ்டர்கள் அடிப்பது, பேரவையில் ஆளுனரை தாக்கி பேசுவது போன்றவை கூடாது என்று எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்