விஜய்யின் கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இருக்கும் நிலையில், அதில் இரண்டு யானைகள் இருப்பது போல் உள்ளது. இந்த நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் தலைவர், தங்கள் அமைப்பின் கொடியை போலவே தமிழக வெற்றி கழகத்தின் கொடி இருப்பதாக வழக்கு பதிவு செய்திருந்தார். எனவே, தமிழக வெற்றி கழகத்தின் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, தங்கள் அமைப்பின் கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரூ.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "தங்கள் அமைப்பின் கொடியை பயன்படுத்தினால் வீணாக குழப்பம் ஏற்படும்" என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது, "வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர், "வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டும் இல்லாமல் சேவைக்கும் பொருந்தும் என்றும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும்" என்றும் கூறினார். இதனை அடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்க விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.