அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவிய நிலையில் அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பொதுக்குழுவின் முடிவை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட்டு வருகிறார்.
மேலும் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆர்.பி.உதயக்குமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக அமர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கேட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்திலேயே ஓபிஎஸ் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர்.
அதன்படி இன்று சபாநாயகரை சந்தித்து இதுகுறித்தும், பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடிகள், தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பேச உள்ளதாகவும், முடிவு எடுக்கப்படாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக சட்டசபையில் குரல் எழுப்பவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.