பீகார் மாநிலம் பாட்னாவில், பரோலில் வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதியை 5 மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில், சிறையிலிருந்து பரோலில் வந்திருந்த சந்தன் மிஸ்ரா என்பவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் சி.சி.டி.வி. காட்சிகளில், ஐந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் சந்தன் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்து, அவரை துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட பிறகு, ஐந்து பேரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும், மிஸ்ரா துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு உடனடியாக வந்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் பீகார் மாநிலத்தில் குற்றங்கள் அதிகமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
"மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அரசே குற்றவாளிகளுக்கும், மாஃபியாக்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது என்றும், பீகாரில் நிர்வாகம் என்ற ஒன்றே இல்லை" என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.