அளவாகக் குடித்தால் உடல்நலம் கெடாது – அமைச்சரின் அடடே பதில் !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (09:12 IST)
சட்டமன்றத்தில் நேற்று நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் தங்கமணி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

ஆனால் தமிழக டாஸ்மாக்குகளில் வழங்கப்படும் மதுவகைகளின் தரம் மிகக்குறைவாக உள்ளதாகவும் குடிப்பவர்களை அதற்கு அடிமையாக்கும் வண்ணம் உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி ‘ குடிப்பவர்கள் அதிகமாகக் குடித்தால் உடல்நலம் கெடத்தான் செய்யும். அளவாகக் குடித்தால் ஒன்றும் ஆகாது. டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாகும் என்பதால் படிப்படையாக மூடப்பட்டு வருகிறது.  6,132 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை  5,152 கடைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது’ எனப் பதிலளித்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள்  இனிமேல், ‘மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு’, என்று அச்சிடுவதற்குப் பதிலாக, ‘அளவா குடிங்க, உடலுக்கு நல்லது’  என விளம்பரப்படுத்துங்கள் எனக் கூறி கேலி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்