தமிழக-கேரளா எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், ஆகிய கேரளா வனப்பகுதிகளில், மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனரா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் கேரள எல்லையில் உள்ள கிளன்ராக் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து சென்ற நக்சல் தடுப்பு போலீஸார், மனிதர்கள் தங்கி இருந்த அடையாளங்கள் உள்ளதை கண்டுபிடித்தனர். உடனே கேரளா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கூடலூர் கேரள எல்லைப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.