மதுரை முஸ்தபா இறந்தது கொரோனாவால் அல்ல… சமூகத்தால் – மதுரை எம்பி உருக்கம்!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (10:03 IST)
மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் மக்களின் ஒதுக்கத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முஸ்தபாவின் மரணம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் உருக்கமான ஒரு பதிவை எழுதியுள்ளார்.

முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளாவில் கூலிவேலை பார்க்கச்சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அக்காவின் வீட்டில் இருந்துள்ளார். இரண்டுமூன்று நாள்களாக காய்ச்சல் கண்டிருந்ததால், வீட்டிலேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். இவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அக்கம்பக்கம் எங்கும் செய்தி பரவியுள்ளது. சிலர் காவல்துறைக்கும் போன் போட்டுச் சொல்லியுள்ளனர். காவலர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிதுநேரத்தில் குட்டியானை எனச் சொல்லப்படுகின்ற டாட்டா ஏசி வண்டியில் முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் ஏற்றுகின்றனர்.

அருவருப்பும் அவமானமும் ஊட்டுஞ்செயலாக அச்செயல் நடந்தேறி இருக்கிறது. இந்தக் காட்சியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் செல்போனில் படமாக்கப்பட்டு “முல்லைநகரில் கொரோனா நோயாளி அழைத்துச் செல்லப்படுகிறார்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருக்கிறது. முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பரிசோதித்து இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அன்று இரவு தெற்குவாசல் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சேர்கிறார் முஸ்தபா. இதற்கிடையில் முஸ்தபாவை முல்லைநகரில் டாட்டா ஏசியில் ஏற்றிய காட்சி சமூக ஊடகங்கள் எங்கும் பரவிவிட்டது. முஸ்தபா அவரது வீட்டுக்கு வருவதைப் பார்த்தவர்கள் சிறிதுநேரத்திலேயே ஒன்றுகூடி, “இவர் கொரோனா நோயாளி. இங்கு இருக்ககூடாது. இவர் இருந்தால் எங்களுக்கும் பரவிவிடும்” என்று பிரச்சனை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு 12 மணியிலிருந்து 2 மணிவரை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்தபா வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். கூட்டத்தினரை, காவல்துறை வந்து தலையிட்டுச் சமாதானப்படுத்தியுள்ளது.அதிகாலையில் குப்பை லாரியில் முஸ்தபாவை ஏற்றி மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர். மருத்துவர்களோ, “நேற்றுத்தானே இவருக்கு கொரோனா இல்லை என்று சொல்லி அனுப்பினோம். மீண்டும் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்று கூறியபடி மறுபடியும் பரிசோதித்து அன்று மாலை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். மீண்டும் அவர் வீடுவந்து புறக்கணிப்பையும் அவமதிப்பையும் தொடர்ந்து சந்தித்துள்ளார். இந்நிலை தொடர்ந்து நீடிக்க, அவமானத்தின் அழுத்தமும் வெறுப்பும் முழுமையாகச் சூழ செவ்வாய்க்கிழமை காலை இரயிலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார்.

காய்ச்சல் கண்ட அந்த இளைஞரைக் கொன்றது கிருமி அன்று; நமது சமூகம்.

ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு அவரைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற அக்கறையும் பொறுமையும் அங்கிருந்த யாருக்கும் ஏன் இல்லாமல் போயின? இரண்டு இடங்களிலும் காவல்துறையைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் ஏன் ஆம்புலன்சை வரவைக்க ஏற்பாடு செய்யவில்லை? டாட்டா ஏசி வாகனத்தில் அவர் ஏற்றிச்செல்லப்படும் அந்தக் காட்சியைப் பார்க்கையில் social stigma எனும் சொல்லின் முழுமையான-உண்மையான-பொருள் காட்சியாகவே இருந்தது. விளிம்புநிலை மனிதர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடத்தலாம் என்ற பொதுபுத்திக்கு மற்றுமொரு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. பாதிப்பில்லை என தெரிந்த பின்னரும் அந்த சமூகம் கொடுத்த வலி பெரிதினும் பெரிதாய் இருந்ததன் விளைவே அந்தத் துர்மரணம்.

கொரோனாவில், தேவை போதிய இடைவெளியே தவிர, சமூக ஒதுக்கம் அன்று. தும்மலும் எச்சிலும் பட்டுவிடக்கூடாது என்பது கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே. அன்று, எச்ஐவி நோயில் நாம் கொடுத்த சமூக விலக்கலினால் ஒதுக்கலினால் மாய்ந்தவர்கள் ஏராளம். அப்படியான ஒதுக்கல் இங்கே மறுபடியும் தொடங்கக் கூடாது. உரிய பாதுகாப்புடன் அரவணைத்து அவரை அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் "உன் உடன் நாங்கள் இருக்கின்றோம்" என சொல்லியிருக்க வேண்டாமா? இனி வரக்கூடிய நாள்களில் இப்படியான உதவிகள் நம் குடும்பத்தாருக்கோ சக மனிதருக்கோ நம் அலுவலக நண்பருக்கோ உடனிருக்கும் தோழருக்கோ தேவைப்படலாம். அப்போது தெறித்து ஓடாமல், விலக்காமல் உரிய பாதுகாப்புடன் உடன் நிற்பதும் ஆறுதல் மொழியுடன் உரிய சிகிச்சை அளிக்க உதவுவதும் மட்டுமே நாம் மனித இனம் எனச் சொல்லிக்கொள்வதிற்கு அர்த்தம் சேர்க்கும். கிருமி நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சமூகத்தின் விலக்கல் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு பலமடங்கு அதிகம்.
மன அழுத்தம் அதிகரிக்கும் காலமிது. இந்தத் தவிர்க்க முடியாத முடக்கத்தில். நம்மை சுயசிந்தனையோடு உருவாக்காத கல்விமுறை, பக்கவாட்டுச் சமூகத்தை பார்க்கவிடாமல் ஓட வைத்த பாடப்புத்தகங்கள், ஒட்டி வாழக்கற்றுக் கொடுக்காத துரித வாழ்வு. பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டே மனிதர்களை எடைபோடும் புத்தி, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் இலக்கியங்களைக் காட்டாத மதிப்பெண் இலக்கணங்கள் என எல்லாமும் சேர்ந்து இப்படி ஒரு சவால் வரும்போது திடத்துடன் சந்திக்கும் மனவலிமையை நமக்குத் தரவில்லை.

“என்ன ஆனாலும் நாங்க இருக்கோம்டா ஒங்கூட” என்ற சொல் எவ்வளவு வலிமைவாய்ந்தது. அந்த ஒற்றைச் சொல் எந்த மனிதனிடமும் கிடைக்காததால்தானே பத்து கிலோமீட்டர் நடந்தே போய் சரக்கு இரயிலிலே பாய்ந்து மாய்ந்திருக்கிறார் முஸ்தபா. நண்பர்களே! சீக்கிரமே கடந்து போய்விடும் கொரோனாவும் வீட்டிற்குள் முடங்கிய இந்தக் காலமும். ஆனால் நாம் பயந்து, பதட்டப்பட்டு, பீதியாகி அழுத்ததிற்குள் நம்மைத் தொலைத்துவிட வேண்டா.

இந்த நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதுகலை படிக்கின்ற மருத்துவ மாணவர்களையும் எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு நூறு சதவிகித பாதுகாப்பான அனைத்துக் கருவிகளையும் அரசு வழங்கிவிட்டதா? நிச்சயம் இல்லை. விரைவில் வழங்க வேண்டும் என நான் உள்பட பலரும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றோம். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊழியரும் அங்கு இரவுபகலாக பணியாற்றுகின்றனர். நமது அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் ஊழியர்களும் கொரோனா வார்டில் பணியாற்ற சுழற்சிமுறையில் அட்டவணைப் போடப்பட்டுள்ளது. ஒருமுறை கொரோனா வார்டில் பணியாற்றினால் 15 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அனைவரும் பணிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சூழலில்தான் அனைவரும் பணியாற்றுகின்றனர். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே! நம் குடும்பத்து உறவுகள்தானே!

அவர்கள் கொரோனா நோயாளிகளை ஒதுக்கும் முடிவையோ, கைவிடும் முடிவையோ எடுத்தால் நாம் என்னவாவோம்? சமூகம் என்னவாகும்? மதுரை மக்களே, கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் மதுரையில் நிகழ்ந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சையைக் கொடுத்தது அது. நாம் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை கொடுத்தது. ஆனால் முஸ்தபாவின் மரணம், கொரோனாவால் நிகழ்ந்தன்று. இது தற்கொலையுமன்று. கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்