அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவல், அவரது கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டிடிவி தரப்பில் வெளியான தகவலில், அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்திருக்கும் நிலையில், அவரை டிடிவி தினகரன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது, டிடிவி தினகரன் உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய உடல்நிலை குறித்து விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.