ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்!; மதுரை கிளை நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:31 IST)
ஆன்லைனில் ரம்மி போன்ற பண மோசடி செய்யும் விளையாட்டுகளை விளையாட மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்டகாலமாக லாட்டரி சீட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் வைத்து சீட்டாடுவதும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூட செய்திகள் வெளியாகியது.

சமீபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த சிலுவை என்பவர் ரம்மி விளையாடியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்மீதான விசாரணையின் போது ஆன்லைனில் வரும் ரம்மி போன்ற பண மோசடி விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை உள்ளது. அதுபோல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கிற்காக ரம்மி விளையாடியதாக கூறிய சிலுவையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், யாராவது பணம் கட்டி ரம்மி விளையாடினால் அவர்கள் மீது வழக்குப்பதியலாம். பொழுதுபோக்கிற்காக விளையாடியவர்கள் மீது வழக்கு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்