அதிவேகமாய் சென்ற கடத்தல் லாரி; டூவிலரில் துரத்திய அதிகாரிகள்! – நள்ளிரவில் சேஸிங்!

வெள்ளி, 24 ஜூலை 2020 (12:58 IST)
ஆம்பூர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற கடத்தல் லாரியை அதிகாரிகள் டூவிலரில் சேஸிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் எல்லைப்பகுதியான மாதனூர் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோர் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக லாரி ஒன்று ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. அதை போலீஸ் நிறுத்த முயற்சிக்கையில் திடீரென வேகத்தை கூட்டிய அந்த லாரி சோதனை சாவடியை கடந்து வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்த்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனே தங்களது பைக்கில் லாரியை விரட்டி சென்றுள்ளனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று லாரியை மடக்கி பிடித்த நிலையில் டிரைவர் தப்பி ஓடியுள்ளார்.

ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த லாரியை சோதனை செய்ததில் சுமார் 15 டன்னுக்கும் அதிகமான தமிழக அரசின் ரேசன் அரிசி அதில் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உடனடியாக லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்