தமிழகத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நேற்று பார்த்தோம். அதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் எந்த வெளிநாட்டு மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லாதவர் என்றும் அவருக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்பதே பெரிய மர்மமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் அவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எந்த சிகிச்சையையும் அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் மருத்துவர்களால் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரை நபர் மரணமடைந்தார் என்பது உறுதியாகி உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு முதலாவதாக ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனாவால் மரணமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது