புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி என்ற பகுதியில், அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அண்ணாமலையின் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் இந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் விருந்தில் சாப்பிட்டனர்.
இந்த நிலையில், பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வரை 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிகிச்சை பெற்று வந்த கருப்பையா என்பவர் உயிரிழந்ததாகவும், இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வட்டாட்சியர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.