அதிமுக - பாஜக கூட்டணியில், தமிழக வெற்றி கழகம் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பாஜகவுடன் கூட்டணி இல்லை" என திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி என இரண்டு பலமான கூட்டணிகள் உள்ளன. இந்த நிலையில், புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்றும், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், "வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை" என்றும், "கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் விஜய் அறிவிப்பார்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, திமுக, அதிமுக கூட்டணிகளில் தமிழக வெற்றி கழகம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மூன்றாவது அணி அமைவதும் உறுதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.