இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்...

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (15:28 IST)
உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். 
 
டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், "களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்.
சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் படிக்கும் டி குகேஷுக்கு வயது தற்போது 12 வயது 7 மாதம். உலகில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் மிகவும் இளையவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின். இருந்தபோதும் இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்தான்.
 
தெலுங்குப் பின்னணியைக் கொண்ட டாக்டர் ரஜினிகாந்த் ஒரு காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி பத்மா குமாரியும் ஒரு மருத்துவர்தான். இந்தத் தம்பதியின் ஒரே மகன்தான் குகேஷ்.
 
"நானும் என் மனைவியும் அவ்வப்போது செஸ் விளையாடிக்கொண்டிருப்போம். மூன்றரை வயதாகும்போதிலிருந்து குகேஷ் அதைக் கவனிப்பான். அதற்குப் பிறகு எங்கள் உறவினரான தினேஷுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். அப்படித்தான் செஸ் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது" என்கிறார் ரஜினிகாந்த்.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகு, குகேஷ் செஸ் விளையாடியதைப் பார்த்த அந்தப் பள்ளிக்கூடத்தின் கோச், அவனை தொடர்ந்து அதில் விளையாட அறிவுறுத்தினார். பாடம் தவிர்த்த செயல்பாடடு ஒன்றைத் தேர்வுசெய்யும்படி பள்ளிக்கூடம் சொன்னபோது, பெற்றோர் உடனடியாக செஸ்ஸையே தேர்வுசெய்தனர். இதற்குப் பிறகு மேல் நோக்கிய பயணம்தான்.
 
7 வயதிலேயே போட்டிகளில் ஆட ஆரம்பித்தான் குகேஷ். அப்போதே ரேட்டிங் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தவனுக்கு 2013 ஆகஸ்டில் 1291 புள்ளிகளுடன் தரவரிசை கிடைத்தது. இதற்குப் பிறகு 2015ல் சிங்கப்பூரில் நடந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்றான்.
 
செஸ்ஸைப் பொறுத்தவரை, காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைவதற்கு பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். அதாவது, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கடக்க வேண்டும். மொத்தமாக 2500 தரவரிசைப் புள்ளிகளையும் பெற வேண்டும்.
 
இந்தக் கடினமான பயணத்தில் படிப்படியாக, உறுதியாக முன்னேறினான் குகேஷ். 2017 அக்டோபரில் மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று இன்டர்நேஷனல் நார்ம் முதல் கட்டத்தைத் தாண்டினான். அதற்குப் பிறகு 2018 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் அதே ஆண்டு மார்ச்சில் ஃபிரான்சில் நடந்த போட்டியில் பங்கேற்று மூன்றாவது கட்டத்தையும் தாண்டி 2400 தகுதிப் புள்ளிகளையும் பெற்று இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றான்.
 
இதற்குப் பிறகு, 2018ல் பாங்காக்கில் நடந்த போட்டியில் கிராண்ட் மாஸ்ட்ர் நார்ம் முதல் கட்டத்தையும் அதே ஆண்டு டிசம்பரில் செர்பியாவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் கடந்த குகேஷ், உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துவிட முடியும் என்றே பலரும் நினைத்தார்கள்.
 
மிக இள வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எடுத்த செர்ஜி கர்ஜகின், 12 வயது 7 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த சாதனையை குகேஷ் முறியடித்திருக்க வேண்டுமானால் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதிக்குள் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். டிசம்பரில் நடந்த Sunway Sitges International போட்டியில் வெற்றிபெற்றிருந்தால், இந்தச் சாதனையைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது.
ஆனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து விளையாடிய குகேஷ், தில்லி இன்டர்நேஷனல் ஓடன் ஜிஎம் போட்டியின் ஒன்பதாவது சுற்றி வெற்றிபெற்றதன் மூலம் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் நார்மின் மூன்றாவது கட்டத்தைத் தாண்டி, இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்தான். இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இந்த சாதனையைப் படைத்திருந்தான். தற்போது அதனை குகேஷ் முறியடித்திருக்கிறான்.
 
பிரக்ஞானந்தா 12 வயது பத்து மாதங்களில் அந்த சாதனையைச் செய்தான். தற்போது குகேஷ் 12 வயது 7 மாதங்களில் இந்த இலக்கை எட்டியிருக்கிறான்.
 
தொடர்ந்து விளையாடியது சோர்வளிக்கவில்லையா? "இல்லை. செஸ் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத்தான் இருக்கிறேன்" என்கிறார் குகேஷ்.
 
கடந்த 16 மாதங்களில் 6 நார்ம்களை, அதாவது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கடந்திருக்கும் குகேஷ், இந்த காலகட்டத்தில் 2323 புள்ளிகளிலிருந்து தற்போது 2512 புள்ளிகளை எட்டியிருக்கிறான். கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 243 ஆட்டங்களை ஆடியிருக்கிறான்.
 
"படிப்பைப் பொறுத்தவரை பள்ளிக்கூடத்தில் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். 2015வரை குகேஷ்தான் பள்ளியிலேயே முதல் மாணவன். அதற்குப் பிறகு செஸ்ஸில் கவனம் செலுத்த விரும்பியதால் வகுப்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். தேர்வு மட்டும் எழுதி வந்தான். தற்போது தேர்வுக்கும் விலக்குக் கேட்டிருக்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.
 
தன் மகனுடன் டோர்னமென்ட்களுக்காக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பதால் முழு நேரப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தற்போது ஒரு மருத்துவமனையில் கன்சல்டன்டாக மட்டும் சென்றுவருகிறார். "மாதத்திற்கு ஐந்து நாட்கள் சென்றாலே பெரிது. அந்த அளவுக்கு பிஸியாக போட்டிகளுக்குச் செல்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.
 
பணமும் ஒரு முக்கியமான பிரச்சனை. எல்லா நாடுகளுக்கும் சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். கடந்த ஆண்டிலிருந்து ஓஎன்ஜிசி உதவித் தொகை வழங்க ஆரம்பித்துள்ளது. மைன்ட்சென்ஸ் என்ற நிறுவனமும் சிறிய அளவில் ஸ்பான்சர் செய்கிறது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இந்த உதவிகள் போதுமானதாக இருப்பதில்லை.
 
குகேஷின் கோச் விஷ்ணு பிரசன்னா. அவனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்.
செஸ் என்பது மனரீதியான ஆட்டம். இந்த வயதில் இவ்வளவு கவனத்துடன் எப்படி இருக்க முடிகிறது? "அது எனக்கு சாதாரணமாகத்தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய விஷயமாக அதனை நான் நினைக்கவில்லை" என்கிறான் குகேஷ்.
 
செஸ் விளையாட்டிற்கு வெளியில் குகேஷ் ஒரு இயல்பான சிறுவன்தான். கிரிக்கெட், பேட்மிடன் ஆடுவதோடு சினிமா பார்க்கவும் பிடிக்கும். "மாலை பேட்ட படத்திற்குச் செல்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.
 
தற்போது முக்கியமான உயரத்தைத் தொட்டிருக்கும் குகேஷைப் பொறுத்தவரை, அடைய வேண்டிய பல உயரங்கள் இன்னும் காத்திருக்கின்றன. "பல கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடிக்க வேண்டும். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவேண்டும்" என்கிறான் குகேஷ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்