மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பாக தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம்பகதூர், கூலிப்படையால் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். மேலும், ஜெ.வின் கைக்கடிகாரங்கள், பரிசு பொருட்கள், வைர நகைகள், ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலையின் மூளையாக செயல்பட்ட கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருக்கு உதவியாக இருந்த சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த விபத்தில் சயனின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.
மேலும், இன்னும் இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
ஜெ.வின் மர்மம் போலவே, கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மர்மமாகவே இருக்கிறது. அந்த பங்களாவில் இருந்த ஜெ.வின் 3 முக்கிய சூட்கேஸ்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் பங்களா நிர்வாகம் சார்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவும், தினகரனுமே எஸ்டேட் நிர்வாகத்தை கவனித்து வந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரிடம் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளதாக போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.