Pro கபடி மும்பை அணியில் கரூர் வீரர்

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (00:11 IST)
கிரிக்கெட் என்பது உலக அளவில் பிரமாண்டம் என்றால் நமது உள்ளூர் கபடி முதல், லீக் தொடர் கபடி வரை பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ப்ரோ கபடி லீக் பெருமளவில், பேசப்பட்டும் விளையாடப்பட்டும் வருகின்றது.
 
கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த ப்ரோ கபடி லீக் கைவிடப்பட்டு 2021-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்கி நடந்து வருகிறது.
 
12 அணிகள் பங்கேற்று விளையாடும் ப்ரோ கபடி லீக் தொரில் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை. பூட்டிய மைதானத்திற்குள் நடந்து வரும் ப்ரோ கபடி தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தொடங்கியது. அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில், பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பெங்களூருவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் வெவ்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வரிசையில், யூ மும்பை அணியில் தமிழ்நாடு வீரர் அஜித் இடம் பெற்றிருக்கிறார். அதனை அடுத்து, பெங்களூருவில் இருக்கும் அஜித், தனது தாயுடன் பேசும் வீடியோ நெகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
 
 
தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் அஜித், தனது தாயுடன் வீடியோ அழைப்பில் பேசுகிறார். அப்போது, தான் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதை தாயிடம் தெரிவிக்கும் அஜித்திற்கு, வீடியோலையே 'திருஷ்டி சுற்றி' போட்டுகிறார் அவரது தாயார். தொடர்ந்து, காயம் குறித்து விசாரிக்கும் அம்மாவிடம், அடுத்த போட்டியில் நிச்சயம் தான் பங்கேற்க இருக்கும் செய்தியையும் சொல்லி முடிக்கிறார் அஜித்!
 
முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வந்த அஜித், இப்போது மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்தின் அப்பா, அம்மா இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். முன்னாள் கபடி வீரரான தனது தந்தையின் கனவை துரத்தி செல்லும் அஜித், ப்ரோ கபடி தொடரில் தவிர்க்க முடியாத முக்கிய வீரராக தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்