கருணாஸ் கார் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து இளைஞர்கள் தாக்குதல்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (13:48 IST)
நடிகரும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை தலைவராக உள்ளார். இவர் புலித்தேவன் பிறந்தநாள் விழாவில் கலந்துள்ள சென்றபோது அவரது கார் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 
 
கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக ஆதரவில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் சசிகலா தரப்பில் ஐக்கியமாகி கூவத்தூர் கும்மாளத்திலும் கலந்துகொண்டார்.
 
இதனால் கருணாஸ் பெயர் பொதுமக்கள் மத்தியில் அடிபட்டது. அவர் மீது சிறிது வெறுப்பும் உருவாகியது. அதன் பின்னர் அவர் தொகுதிக்கு சென்ற போது அவருக்கு சில எதிர்ப்புகளும் இருந்தன. இந்நிலையில் தற்போது தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் கருணாஸ் முதலில் தினகரன் தரப்புக்கு தனது ஆதரவு என சூசகமாக தெரிவித்தார்.
 
ஆனால் அதன் பின்னர் பல்டியடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஸ்டாலின் என மூவரையும் சந்தித்து பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்ததாக கூறினார். இந்நிலையில் அவரது கார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
நேற்று சங்கரன் கோவிலை அடுத்த நெற்கட்டும் செவலில் புலித்தேவனின் 302-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், ராஜலட்சுமி ஆகியோர் வந்தனர்.
 
ஆனால் அதில் அவர்களுடன் வராமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாக வந்தார் எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ். அங்கு அரசியல்வாதிகளின் கார்களை நிறுத்தி நடந்து செல்வதற்கென்று காவல்துறையினர் தனியாக ஒரு இடத்தை கொடுத்திருந்தனர்.
 
ஆனால் கருணாஸின் கார் அதைவிட முன்னோக்கி சென்றதால் அங்கிருந்த வாலிபர்கள் கருணாஸ் காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்