காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடையால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவம் இன்று நடைபெற்றது. வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி, பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வரதராஜ பெருமாள் சென்ற நிலையில் திடீரென கருட சேவை உற்சவத்தில் குடை போட்டு, சுவாமியை குலுக்கிய போது, குடை கீழே விழுந்தது. கருட சேவை உற்சவத்தில் மூன்று இடங்களில் குடை தவறி விழுந்ததாகவும், சுவாமியை குலுக்கிய போது குடையை பிடிக்க முடியாமல் கோவில் பட்டாச்சாரியார்கள் தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல்லக்கை தூக்கிய போது, அதன் தண்டு உடைத்து பெருமாள் சிலை கீழே சரிந்த சம்பவமும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் வரதராஜ பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது என்றும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது என்பதும் அதன்பின்னர் மீண்டும், கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,.