இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகை என்னாச்சு..? – பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (08:17 IST)
தமிழ்நாடு அரசு ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்த தனது கருத்துகளை மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 2022-2023 க்கான ஆண்டு பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.

அதே நேரத்தில் அழுத்தம்திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்.

எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்குமென எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்