எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜா: டுவிட்டரில் கமல்ஹாசன் சீற்றம்!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (10:01 IST)
நடிகர் கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை எனவும், அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது எனவும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கடுமையாகவும், ஒருமையிலும் விமர்சித்தனர். அவர் ஒரு  ஆளே கிடையாது என கீழ்தரமாக கருத்து தெரிவித்தனர். ஒரும் அமைச்சர் அவரை மிரட்டும் தொணியிலும் பேசினர்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில்  அரசியல் தொடர்பாக கமல் வெளியிட்ட கவிதை ஒன்றில் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என குறிப்பிட்டிருந்தார். இதனால் கமல் அரசியலுக்கு வர இருக்கிறாரோ என பலரும் பேசிக்கொண்டனர். 
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, எல்லோருக்கும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால், விஸ்வரூபம் படம் வெளியாவதில் இஸ்லாமியர்களால் சிக்கல் ஏற்பட்ட போது, அழுது புரண்டு, தான் இந்த நாட்டை விட்டே செல்வேன் எனக் கூறிய முதுகெலும்பில்லாத கோழை கமல்ஹாசன். எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறவதற்கு வாய்ப்பே இல்லை என கூறினார்.
 
மேலும் கமல்ஹாசனை மீண்டும் மீண்டும் முதுகெலும்பு இல்லாத கோழை என அவர் விமர்சித்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும் நடுநிலையான மக்களுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கோபத்தை நாகரிகமாக நக்கல் செய்யும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
 
அந்த அறிக்கையில் எச்.ராஜா தன்னை முதுகெலும்பில்லாத கோழை என விமர்சித்ததற்கு, அவரை தம்பி எலும்பு வல்லுனர் எச்.ராஜா என கூறி நக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் சில வரிகள் கீழே உள்ளது.
 
ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு.ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்