விஜய்க்கு கொக்கி போடும் காங்கிரஸ்! – இணைவாரா விஜய்?

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (15:09 IST)
நடிகர் விஜய் காங்கிரஸில் இணைய விரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களில் விஜய்க்கும், பாஜகவினருக்கும் இடையேயான சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தே வருகிறது. விஜய் படங்களில் பேசும் வசனங்கள் பாஜகவை தாக்குவதாக உள்ளதாக கூறப்படும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்த போது நடிகர் விஜய்யை பழிவாங்க பாஜக இதுபோன்ற ரெய்டுகளை செய்வதாக சமூக வலைதளங்கள் முதற்கொண்டு பலவற்றிலும் பேசப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல் ரெய்டு முடிந்து நெய்வேலியில் படப்பிடிப்பு விஜய் சென்ற போது அங்கு சில பாஜக தொண்டர்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விஜய் ரசிகர்கள் அதிகளவில் அங்கு கூடியதாலும், முறையாக படப்பிடிப்பு அனுமதி பெற்றிருந்ததாலும் படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பினார் விஜய். அப்போது அவருக்காக நெய்வேலிக்கு வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போதே விஜய்க்கு இளைஞர்களிடையே உள்ள செல்வாக்கு அரசியல் கட்சிகளின் பார்வைக்கு வந்திருக்கலாம். அந்த சமயத்திலும் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”நடிகர் விஜய் காங்கிரஸில் இணைந்தால் ஏற்றுக்கொள்வோம். நாங்கள் நடிகர் ரஜினிக்கு எதிராகவும் பேசவில்லை. விஜய்க்கு ஆதரவாகவும் பேசவில்லை’ என்று கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரியின் இந்த பேச்சு விஜய்க்கு மறைமுகமாக விடுக்கப்படும் அழைப்பு என்று பேசிக்கொள்ளப்படுகிறது. எனினும் நடிகர் விஜய் இதுவரை தனது கட்சி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் காங்கிரஸின் இந்த மறைமுக அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழைப்புக்கு நடிகர் விஜய் என்னமாதிரியான பதில் அளிக்கப்போகிறார் என்று மற்ற கட்சிகளும், அவரது ரசிகர்களுமே ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்