ஜெயலலிதா வில்லி; திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ - ஸ்டாலின் விளக்கம்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (16:09 IST)
ஜெயலலிதா என்ற வில்லியிடம் இருந்து தமிழ் நாட்டை காப்பாற்றுகின்ற கதாநாயகனாக திமுக தேர்தல் அறிக்கையை தலைவர் கலைஞர் வெளியிட்டு இருக்கிறார் என்று திமுக பொருளாளர் கூறியுள்ளார்.
 

 
அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய ஸ்டாலின், ”அதிமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நமது திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்து அதில் அவர்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
 
காரணம் ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவர்களுக்கு ரொம்ப பெருமை என்பதுதான் உண்மையே தவிர வேறு இல்லை. அப்படி நமது தேர்தல் அறிக்கையில் ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டு இருக்கிறார்.
 
இப்படியொரு தேர்தல் அறிக்கையை 25 நாட்களாக ஒரு தலைமைச் செயலாளர், முக்கியமான சில அதிகாரிகள் உட்கார்ந்து தயாரித்து இருக்கிறார்கள். யார் யார் என்ற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. மொத்தமாக 19ஆம் தேதிக்கு பிறகு அதையெல்லாம் நாங்கள் வைத்துக் கொள்கிறோம்.
 
தலைவர் கலைஞர் 2006இல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சட்டமன்றத் தேர்தலில் கதாநாயகன், ”ஹீரோ” என்றார்கள். இப்போது 2016இல் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ”சூப்பர் ஹீரோ” என்று சொல்கிறார்கள்.
 
சினிமாவில் ஹீரோ வில்லனிடம் சண்டை போட்டு கதாநாயகியை காப்பாற்றுவார். அதேபோல ஜெயலலிதா என்ற வில்லியிடம் இருந்து தமிழ் நாட்டை காப்பாற்றுகின்ற கதாநாயகனாக திமுக தேர்தல் அறிக்கையை தலைவர் கலைஞர் வெளியிட்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
....
அடுத்த கட்டுரையில்